Mr. Ramanathan Thirusenthinathan
Date of Birth: 29 November 1959 - Deceased: 29 March 2026
யூனியன் கல்லூரி ஆரம்பப் பாடசாலை பழைய மாணவி பாலமீராவின் பாசமிகு சகோதரரும், நோர்வேயில் வசிக்கும் எமது கல்லூரி பழைய மாணவர் மூத்ததம்பி சதானந்தன் (82 O/L 85 A/L) அவர்களின் மைத்துனருமான, வயாவிளான் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் திரு. இராமநாதன் திருசெந்திநாதன் அவர்கள்,29.03.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 67 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
பபியின் இறுதி நாட்கள் (குடும்ப உறவினரின் பதிவிலிருந்து) ஒரு நெகிழ்ச்சியான போராட்டம்.
சுமார் ஏழு வாரங்களுக்கு முன்பு, பிரான்ஸ் வீதியொன்றில் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்த பபி (இராமநாதன் திருசெந்திநாதன்) அவர்கள், அவசர சிகிச்சை ஊர்தி மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை ஊர்தியிலும் மருத்துவமனையிலும் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்களால் செயற்கை கோமா நிலைக்கு மாற்றப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் அந்த நிலையிலிருந்து மீண்டு வந்தார்.
அவரது உடலில் அவ்வப்போது அசைவுகள் தென்பட்ட போதிலும், மூளையின் முக்கிய பகுதி செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த இக்கட்டான சூழலில், கடந்த வாரம் அவரது உயிருக்கு ஆதாரமாக இருந்த செயற்கை சுவாசக் கருவி (Ventilator) அகற்றப்பட்டதுடன், குழாய் வழி உணவும் நிறுத்தப்பட்டது.
இருப்பினும், பபி அவர்கள் தனது மனவலிமையால் தானாகவே சுவாசிக்கத் தொடங்கினார்.
தொடக்கத்தில் மூக்கில் பொருத்தப்பட்ட காற்று முகக்கவசத்தின் (Air Mask) துணையுடனும், குளுக்கோஸ் உதவியுடனும் அவரது சுவாசம் தொடர்ந்தது.
"செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்ட பின், அவரது சுவாசம் ஓரிரு மணிநேரங்களே நீடிக்கும்" என்று மருத்துவர்கள் கணித்திருந்தனர்.
ஆனால், மருத்துவர்களின் கணிப்புகளைக் கடந்து, அடுத்த நாள் முகக்கவசம் அகற்றப்பட்ட பின்னரும் அவர் தொடர்ந்து சுவாசித்தார். குடும்ப உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டது.
எனினும், மருத்துவ ஆலோசனையின்படி உணவு மற்றும் குளுக்கோஸ் படிப்படியாக நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து தானாகவே சுவாசித்து வந்த நிலையில், அவருக்குச் சுவாசச் சிக்கல்கள் ஏற்பட்டன. இதனையடுத்து மருத்துவர்கள் மயக்க மருந்தினை அவருக்கு வழங்கினர்.
இறுதியில், பபி அவர்கள் 29.03.2026 அன்று இரவு அமைதியான முறையில் இயற்கை எய்திவிட்டார்.
அவருடைய ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்...
குறிப்பு:
பபியின் இந்த இறுதிக்கட்டப் பயணம், மருத்துவர்களின் கணிப்புகளையும் தாண்டி, நம் அனைவருக்கும் ஒரு சவாலான மற்றும் பெரும் உணர்வுப்பூர்வமான அனுபவமாக அமைந்தது.
பபியின் குடும்ப உறவுகள், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களின் நம்பிக்கைகளும், அவர்களது வேண்டுதல்களும் பலனின்றிப் போயின.
போராட்டங்கள் நிறைந்த அந்த நாட்களுக்குப் பிறகு, அவர் இப்போது மீளாத்துயிலில் ஆழ்ந்துள்ளார்.
மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அன்னார், அமரர்கள் E.V.இராமநாதன் மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
றோஸ்மலர் அவர்களின் அன்பு கணவரும்,
கலியுகன், துர்க்காசனனி, துர்க்காஜினி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
சேதுநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியர், Mallaham, Sri Lanka), ஸ்ரீ அருள்நாதன் (மகாஜனக் கல்லூரி பழைய மாணவர், Toronto, Canada), பாலமீரா (யூனியன் கல்லூரி, Holy Family Convent, Jaffna பழைய மாணவி, Oslo -Norway) பாசமிகு சகோதரரும்,
மல்லாகம் இந்துக் கல்லூரி ஓய்வுபெற்ற அதிபர் அமரர் மகாதேவன், அமரர் சகாதேவன் ஆகியோரின் மருமகனும் ஆவார்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை யூனியன் கல்லூரி சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2026 04:31)
