Mr. Selliah Rajadurai
Date of Birth: 27 July 1927 - Deceased: 07 December 2025
இலங்கை முன்னாள் அமைச்சர் திரு. செல்லையா ராஜதுரை சென்னையில் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மருத்துவமனையில் தனது 98வது வயதில் உடல்நலக்குறைவால் இறையடி சேர்ந்தார்.
இலங்கை முன்னாள் அமைச்சர் இலங்கையின் மட்டக்களப்பு தொகுதியில் 1956 - 1989 வரை தொடர்ந்து 33 வருடங்கள் எம். பி. யாக இருந்துள்ளார். இலங்கை தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய செல்லையா ராஜதுரை, தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர்.
இலங்கையின் தலைசிறந்த பேச்சாளராக இருந்து வந்த செல்லையா ராஜதுரை 'சொல்லின் செல்வர்' என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த 1956 ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் மட்டக்களப்பு தொகுதியில் எம்.பி. யாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
அதன் பிறகு தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகளுக்கு அதே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதல் மேயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்தார் செல்லையா ராஜதுரை. பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல்நிலை படிப்பை முடித்தார். ஊடகவியலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
இதேபோன்று 'சுதந்திரன்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் ராஜதுரை பணியாற்றி உள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து கடந்த 1977 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் மட்டக்களப்பு தொகுதியில் வெற்றி பெற்றார்.
1979 பிப்ரவரி 10ஆம் தேதி, அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து செல்லையா ராஜதுரையை ஆளும் கட்சியில் சேர்ப்பதற்காக கடந்த 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி அரசியலமைப்பிலேயே திருத்தம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1979 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.
பின்னர் செல்லையா ராஜதுரைக்கு இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் செல்லையா ராஜதுரை சென்னைக்கு புலம்பெயர்ந்தார். புலம்பெயர் நபராகவே சென்னையில் வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
செல்லையா ராஜதுரை மறைவு செய்தி கேட்டு கொழும்பு சாயி மத்திய நிலையம் உள்பட பல்வேறு அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
